Sunday, 2 February 2014

மெய்யுணர்தல்

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே.


 பதப்பொருள் : உடையாய் - என்னை ஆளாக உடையவனே, உன் - உனது, விரை ஆர் - மணம் நிறைந்த, கழற்கு - திருவடிகளைக் குறித்து, என் - என்னுடைய, மெய் அரும்பி - உடல் புளகித்து, விதிர்விதிர்த்து - நடுநடுங்கி, கை தலைவைத்து - கைகளைச் சிரமேல் வைத்து, கண் நீர் ததும்பி - கண்களில் நீர் நிரம்பி, உள்ளம் வெதும்பி - மனம் வாடி, பொய் தவிர்ந்து - பொய்யொழுக்கத்தினின்றும் நீங்கி, உன்னை - உன்னை, போற்றி - வணக்கம், சயசய போற்றி - வெற்றி வெற்றி வணக்கம், என்னும் - என்று துதிக்கின்ற, கை - ஒழுக்கத்தை, நெகிழவிடேன் - அடியேன் நழுவவிடேன், (ஆகையால்) என்னை - எனது நிலைமையை, கண்டு - நோக்கி, கொள் - என்னை ஏற்றுக் கோடல் வேண்டும்.

Saturday, 11 January 2014

பழமொழி நானூறு

ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண்
பக்கத்து ஒருவன், ஒருவன்பால் பட்டிருக்கும்;-
மிக்க சிறப்பினர் ஆயினும், தாயர்க்கு
மக்களுள் பக்கமோ வேறு

(சொ-ள்.) ஒக்கும் வகையான் உடன் பொரும் சூதின் கண் - ஒக்கும்படி சிலருடன் கூடி விளையாடும் சூதாட்டிடத்து, பக்கத்து ஒருவன் ஒருவன்பால் பட்டிருக்கும் -பக்கத்திலே
இருந்து ஒருவன் ஒருவனைச் சார்ந்து வேண்டியன கூறிக்கொடுப்பான்; (அதுபோல), மிக்க சிறப்பினராயினும் - மக்கள் எல்லோரும் மிகுந்த சிறப்புடையவராகக் கருதப்படுவாரேயாயினும், தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு - தாய்மார்களுக்கு மக்களுள்ளும் கல்வி யறிவான் மிக்காரிடத்து அன்பு தனிச் சிறப்புடையதாக இருக்கும்.

Thursday, 9 January 2014

தேடிச் சோறு நிதந் தின்று

தேடிச் சோறு நிதந் தின்று – பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்


வாடப் பலசெயல்கள் செய்து - நரை


கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்


கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல


வேடிக்கை மனிதரைப் போலே - நான்


வீழ்வேனென்று நினைத்தாயோ ?!


-பாரதி